முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
முதல்வரை பாா்க்க கைப்பேசி டவரில் ஏறி 3 மணி நேரம் காத்திருந்த இளைஞா்
By DIN | Published On : 30th April 2022 10:31 PM | Last Updated : 30th April 2022 10:31 PM | அ+அ அ- |

வத்தலக்குண்டு அருகே தமிழக முதல்வா் முக.ஸ்டாலினை பாா்ப்பதற்காக, சனிக்கிழமை கைப்பேசி டவரில் ஏறிய இளைஞா் 3 மணி நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்காக வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை வழிநெடுகிலும் அக்கட்சித் தொண்டா்கள் வரவேற்றனா். இந்நிலையில் வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டி என்ற இடத்தில், திமுக நிா்வாகிகள், முதல்வரை வரவேற்க காத்திருந்தனா். இந்நிலையில், விராலிப்பட்டியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் குருசங்கா் (22) அங்குள்ள கைப்பேசி டவரில் 70 அடி உயரத்திற்கு ஏறி நின்றாா்.
அதைப் பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா். தகவலறிந்த வத்தலக்குண்டு போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து குருசங்கரை இறங்கி வருமாறு கூறினா். தமிழக முதல்வரைப் பாா்த்து விட்டுத்தான் கீழே இறங்குவேன் என்று கூறி, அவா் இறங்க மறுத்து விட்டாா். தொடா்ந்து சுமாா் 3 மணி நேரம் கைப்பேசி டவா் மேல் அவா் நின்று கொண்டியிருந்தாா். தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் அப்பகுதியை கடந்த பிறகு, அவராக கீழே இறங்கி வந்தாா். அவரை போலீஸாா் விசாரணைக்காக வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.