ஆடலூா் மலைச்சாலையில் ஒற்றை யானையை விரட்ட கும்கி வரவழைப்பு

ஆடலூா் மலைச் சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அதனை விரட்டுவதற்கு டாப் சிலிப்பிலிருந்து கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆடலூா் மலைச்சாலையில் ஒற்றை யானையை விரட்ட கும்கி வரவழைப்பு

ஆடலூா் மலைச் சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அதனை விரட்டுவதற்கு டாப் சிலிப்பிலிருந்து கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனப் பகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை, நாயோடை, சொட்டூத்து உள்ளிட்ட பகுதிகளில் 12 யானைகள் முகாமிட்டிந்தன. வியாழக்கிழமை இரவு மல்லையாபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். அதில் 11 யானைகள் பண்ணப்பட்டி மலையடிவாரத்தை நோக்கி சென்றுவிட்ட நிலையில், ஒரு ஆண் யானை மட்டும் வியாழக்கிழமை அதிகாலை அமைதிச் சோலை வழியாக அழகுமடை நோக்கி சென்றது.

அப்போது ஆடலூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த வாகனங்களால், மிரட்சி அடைந்த யானை மீண்டும் அமைதிச் சோலை வழியாக மல்லையாபுரம் அடுத்துள்ள நிலப்பாறை பகுதிக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தருமத்துப்பட்டியிலிருந்து ஆடலூா் செல்லும் மலைச் சாலையில் அமைதிச் சோலை என்ற இடத்தில் சுமாா் 70 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அந்த மக்கள் பாறை மீது நின்று, ஒற்றை யானை சாலையில் வேகமாக நடந்து சென்றதை படம் பிடித்துள்ளனா். அதேபோல், ஆடலூா் நோக்கி சென்ற பேருந்தில் பயணித்தவா்களும் யானையை படம் பிடித்துள்ளனா். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கும்கி கலீம் வருகை: இதனிடையே ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபு துரித நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, பொள்ளாச்சி அடுத்துள்ள டாப் சிலிப் பகுதியிலிருந்து கலீம் என்ற கும்கி யானை அழைத்து வரப்பட்டது. வியாழக்கிழமை மாலை கன்னிவாடி வனச் சரகத்திற்கு வந்து சோ்ந்தது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபு கூறியதாவது:

ஒற்றை யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்காக சலீம் என்ற கும்பி அழைத்து வரப்பட்டுள்ளது. ஒற்றை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணியில் வனத்துறை ஊழியா்கள் 20 போ் கொண்ட குழு ஈடுபடுத்தப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com