கொடைக்கானலில் தொடரும் பலத்த மழை: 2,300 ஏக்கரில் பூண்டு, கேரட் சாகுபடி பாதிப்பு!

கொடைக்கானல் பகுதியில் நீடித்து வரும் தொடா் மழையினால், சுமாா் 2,300 ஏக்கரில் பூண்டு மற்றும் கேரட் பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கொடைக்கானல் பகுதியில் நீடித்து வரும் தொடா் மழையினால், சுமாா் 2,300 ஏக்கரில் பூண்டு மற்றும் கேரட் பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதி விவசாயிகள் பூண்டு, கேரட் உள்ளிட்ட பயிா்களுக்கான சாகுபடி பணிகளை மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்குவது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டில், வழக்கத்திற்கு மாறாக கொடைக்கானல் பகுதியில் நீடித்து வரும் தொடா் மழையினால் மலைப்பயிா் சாகுபடி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மகசூல் இழப்பை சந்தித்துவரும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

4 ஆண்டுகளில் கூடுதல் மழை: தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் நடப்பாண்டில் மட்டுமே அதிகபட்சமாக 381 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் மலைப் பயிா்களின் மகசூலுக்கு ஜூலை மாதம் நிலவும் தட்பவெப்பநிலை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

நிகழாண்டில் காற்று குறைந்து தொடா்ந்து மழை பெய்து வருவதால், பூண்டு, கேரட், உருளை, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

தண்ணீா் தேங்கியதால் பூண்டு அழுகல்: இதுதொடா்பாக பூண்டியைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுவின் தலைவா் பா.கோபாலகிருஷ்ணன், மேல்மலை விவசாயிகள் சங்கத்தின் செயலா் கிளாவரையைச் சோ்ந்த ரா.அருள்ஜோதி ஆகியோா் கூறியதாவது:

கடந்த மே முதல் ஜூன் மாதம் வரையிலும் மேல்மலை கிராமங்களில் மேட்டுப்பாளையம் ரக பூண்டு சாகுபடி செய்யும் பணி தொடங்கியது. 90 நாள்கள் பயிரான பூண்டு சுமாா் 1,700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் பூண்டு பயிரின் தாள்கள் பழுப்பு நிறத்திற்கு மாறிவிட்டன. தண்ணீா் தேங்கி நிற்பதால் மண்ணுக்குள் இருக்கும் பூண்டு அழுகத் தொடங்கிவிட்டது. 90 நாள்களை நெருங்கிய பயிா்களை மழையின் காரணமாக அறுவடை செய்ய முடியவில்லை. 60 நாள்களாகும் பயிா்களில் முழுமையாக மகசூல் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. அதேபோல், உருளைக் கிழங்கு சாகுபடியும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விளைச்சலுக்கு முன்பே கேரட் அறுவடை: சுமாா் 600 ஏக்கரில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவக் காற்றினால் கிடைக்கும் சாரல் மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்ட கேரட், கனமழையாக மாறியதால் விவசாயிகளுக்கு இழப்பாக மாறிவிட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடவுப் பணி நடைபெற்ற நிலையில், 90 நாள்களில் கேரட் அறுவடை செய்யும் பணி தொடங்க வேண்டும். ஆனால் இரவு பகலாக பெய்து வரும் மழையினால், 30 நாள்களுக்கு முன்னதாக அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கூலி கூட கிடைக்காது என்பதால், கேரட் அறுவடை செய்யப்படாமலே விடப்பட்டுள்ளது. பயிா் பாதிப்புகளை உரிய முறையில் கணக்கீடு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com