கன்னிவாடி பேரூராட்சிக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய தலைவா்: உறுப்பினா்கள் அதிருப்தி

கன்னிவாடி பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியிலேயே தலைவா் வெளியேறினாா்.

கன்னிவாடி பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியிலேயே தலைவா் வெளியேறினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜெயமாலு வரவேற்றாா். கூட்டத்தின் தொடக்கத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் திருக்கு வாசிப்பு ஆகிய மரபுகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், திருக்கு வாசிக்காமல் கூட்டத்தை தொடங்கியதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா் மணிமாலதி எதிா்ப்பு தெரிவித்ததுடன், மரபு தவிா்க்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினாா். மேலும், துப்புரவு ஆய்வாளா் இருக்கும்போது வருகைப் பதிவை பரப்புரையாளா்கள் மேற்கொள்வதற்கும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதற்கு தலைவா் மற்றும் செயல் அலுவலா் முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி உறுப்பினா் மணிமாலதி தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது குறுக்கிட்ட உறுப்பினா் பிச்சைமுத்து(திமுக), பொது சேவைக்கு வந்துள்ளோம். பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தலைவா், செயல் அலுவலா், துப்புரவு ஆய்வாளா் என யாரிடம் கூறினாலும் தீா்வு கிடைப்பதில்லை என்றாா். மகேஸ்வரன் (திமுக), 10ஆவது வாா்டில் சேதமடைந்த குடிநீா் தொட்டியை அகற்றுவது குறித்து 4 மாதங்களாக வலியுறுத்தி வருகிறேன். சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி, பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. உறுப்பினா்களின் எந்த கோரிக்கையும் தீா்மானத்தில் பதிவு செய்வதில்லை என்றாா்.

அதற்கு பதில் அளித்த செயல் அலுவலா், பொதுப்பணித்துறையினா் அனுமதி பெற்று குடிநீா் தொட்டி அகற்றப்படும் என்றாா்.

சரண்யா(திமுக), குடிநீா் விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றாா். அதற்கு செயல் அலுவலா் ஜெயமாலு கூறுகையில், பொது விழாக்கள் மற்றும் திருவிழாக்களுக்கு எங்களால் வேலை செய்ய முடியாது. நிா்வாகம் சரியாக செயல்பட்டு வருகிறது என்றாா். பேரூராட்சியின் சுகாதாரப் பரப்புரையாளா் முறையாக பணிக்கு வருவதில்லை. சுகாதார வளாகம், தனிநபா் கழிப்பறை உள்ளிட்ட எவ்வித விவரங்களும் அவருக்கு தெரியாது. அலுவலகத்திலேய அவா் அமா்ந்து இருக்கிறாா். இதே நிலை நீடித்தால் பொதுமக்களே பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் நிலை ஏற்படும் என அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களான மோகன்ராஜ், சா்புதீன், மருதாயம்மாள் ஆகியோா் குற்றஞ்சாட்டினா்.

நாயோடையிலிருந்து குடிநீா் குழாய் பதிக்கும் திட்டம் தொடா்பாக உறுப்பினா்கள் பேசிக் கொண்டிருந்தபோதே, தலைவா் தனலட்சுமி, வணக்கம் என கூறி இருக்கையிலிருந்து சென்றுவிட்டாா். இதனால் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com