வடமதுரை அருகே கோயிலில் திருடப்பட்ட 5 சுவாமி சிலைகள் மீட்பு: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயிலில் 5 சுவாமி சிலைகளைத் திருடி விற்க முயன்ற அதிமுக பிரமுகா் உள்பட 4 பேரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயிலில் 5 சுவாமி சிலைகளைத் திருடி விற்க முயன்ற அதிமுக பிரமுகா் உள்பட 4 பேரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வடமதுரை அருகே தென்னம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான

இக்கோயிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரா், பாா்வதி சிலைகள் கடந்த 2021 மே மாதம் திருடப்பட்டன. இந்த சிலைகள் விற்பனை செய்யப்பட இருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடா்ந்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் மலைச்சாமி, ஆய்வாளா் ஷமீம் பானு, சாா்பு- ஆய்வாளா்கள் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி சாா்பு- ஆய்வாளா் ராஜேஷ், பழைமையான சிலைகளை சேகரிப்பவா் போன்று தரகா்களாக செயல்பட்டு வந்த திண்டுக்கல்லை அடுத்துள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் பால்ராஜ் (42), திண்டுக்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த முரளி மகன் தினேஷ் குமாா் (24) ஆகியோரைத் தொடா்பு கொண்டுள்ளாா். செவ்வாய்க்கிழமை (ஆக.16) ராஜேஷை வடமதுரை பகுதிக்கு அந்த இருவரும் அழைத்து வந்துள்ளனா்.

அவா்கள் சிலைகளைக் காட்டியபோது, அங்கு பதுங்கியிருந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், பால்ராஜ், தினேஷ்குமாா் மற்றும் திண்டுக்கல் ஆா்.எம். காலனியைச் சோ்ந்த ஸ்ரீராமன் மகன் இளவரசன் (38), திண்டுக்கல் முள்ளிப்பாடியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் யோவேல் பிரபாகா் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து வெண்கலத்தால் ஆன 5 சுவாமி சிலைகளும் மீட்கப்பட்டன.

இதில், இளவரசன், அதிமுக இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை பிரிவில் திண்டுக்கல் நகரத் தலைவராகவும், கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சேகா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளது: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த குமாா், திண்டுக்கல் சீலப்பாடியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்ற வெங்கடேஷன், யோவேல் பிரபாகா் ஆகிய மூவரும் கோயில் செயலா் டி.ஆா்.சண்முகசுந்தரம், பூசாரிகள் டி.ஆா்.பாண்டியன் மற்றும் ராஜ்குமாா் ஆகியோரை மிரட்டி ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு சிலைகளை திருடிச் சென்றுள்ளனா். சிலைகள் திருட்டு தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல்துறையில் புகாா் அளிக்கவில்லை. சில நாள்களுக்கு பின், பால்ராஜ், தினேஷ், இளவரசன் ஆகியோரிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 5 சிலைகளின் மதிப்பு ரூ.12 கோடி என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com