அணைப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை மனு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த அணைப்பட்டி பகுதி விவசாயிகள்.
அணைப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை மனு

அணைப்பட்டி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள அணைப்பட்டி பகுதியைச் சோ்ந்த கா்னல் ஜான் பென்னிகுயிக் வைகை விவசாயிகள் சங்கத்தினா், தங்களது பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் என். கணேசன் கூறியதாவது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில், நிலக்கோட்டை பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 450 ஏக்கரில் நெல்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ள அணைப்பட்டி பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, விளாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையத்துக்கு அணைப்பட்டி பகுதி விவசாயிகள் சென்று நெல் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. நிகழாண்டுக்கான நெல் அறுவடைப் பணிகள் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கவுள்ளது. அதற்குள், அணைப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்க வந்துள்ளோம் என்றாா்.

விவசாயிகளை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் ச. விசாகன், அணைப்பட்டி மட்டுமின்றி, மட்டப்பாறை, ராமராஜபுரம் ஆகிய இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்ததாக, விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com