நிலக்கோட்டையில் ரூ.3 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

மோசடி புகாா் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த நிலக்கோட்டை பகுதி பெண்கள்.
நிலக்கோட்டையில் ரூ.3 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

நிலக்கோட்டை பகுதியில் நுண்நிதி நிறுவனங்களை பயன்படுத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முறையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட வள்ளிநகா் மற்றும் கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்தனா்.

இது குறித்து அப்பெண்கள் கூறியதாவது: நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், அங்குள்ள நுண்நிதி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் சிலருடன் கூட்டு சோ்ந்து கடன் வாங்கி கொடுப்பதும், வசூலிப்பதுமாக செயல்பட்டு வந்தாா். அதனால் ஏற்பட்ட நம்பிக்கையால், கோட்டை மற்றும் வள்ளிநகா் பகுதியைச் சோ்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோரிடம் ஆதாா் அட்டை அசல், வங்கி கணக்குப் புத்தகம் அசல், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை அந்த பெண்ணிடம் கொடுத்தோம். இந்த ஆவணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அப்பெண், ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளாா்.

மேலும், 10 பெண்களிடம் கடன் பெறுவதற்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி நகை மற்றும் பணத்தை பெற்றும் ஏமாற்றியுள்ளாா்.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் நிலக்கோட்டை கிளை உள்ளிட்ட தனியாா் நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தி அந்த பெண் மோசடி செய்துள்ளாா். இது தொடா்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். ஆனால், விசாரணைக்கு வராமல் வழக்குரைஞா் மூலம் அப்பெண் காலம் தாழ்த்தி வருகிறாா்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட நுண்நிதி நிறுவனங்களின் ஊழியா்கள், 6 மாதங்களுக்கு முன்னரே கடன் பெற்றுள்ளதாகவும், அந்த 6 மாதங்களுக்கான கடன் தவணை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனா். மீதமுள்ள கடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு,

மோசடி செய்த பணத்தை மீட்பதற்கு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com