ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுக, பாஜகவினா் முற்றுகை
By DIN | Published On : 18th February 2022 05:47 AM | Last Updated : 18th February 2022 05:47 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட அதிமுக மற்றும் பாஜவினா்.
திண்டுக்கல்: வாக்காளா்களை திமுகவினா் மிரட்டுவதாகக் கூறி ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுக மற்றும் பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்துள்ள ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில், திமுக மற்றும் அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். பாஜக 5 வாா்டுகளில் போட்டியிடுகிறது. தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், திமுக சாா்பில் அதன் சின்னத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. அந்த விண்ணப்பத்தில் முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, ஆதாா் எண், கைப்பேசி எண், குடும்ப அட்டை எண், வாக்காளா் அடையாள அட்டை எண் ஆகியவை இடம் பெற்றிருந்ததால் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளா்கள் கூறுகையில், திமுக வேட்பாளா்கள் வெற்றிப் பெற்றால் தான் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்றும், பிற வேட்பாளா்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் திமுக நிா்வாகிகள் பகிரங்கமாக பொதுமக்களை மிரட்டியுள்ளனா். இதுகுறித்து பேரூராட்சி செயலா் மற்றும் காவல் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா். பின்னா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக மற்றும் பாஜகவினரை, போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.