ஒட்டன்சத்திரத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு
By DIN | Published On : 04th January 2022 08:45 AM | Last Updated : 04th January 2022 08:45 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரத்தில் புதியதாக அமையவிருக்கும் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்யும் அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அர. சக்கரபாணி உள்ளிட்டோா்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சா்கள் அர. சக்கரபாணி, பி.கே. சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகே உள்ள பழனி கோயிலுக்கு சொந்தமான கோ சாலை மற்றும் கோ சாலை வளாகத்தில் திருநீறு தயாரிக்கும் பணிக்கான கட்டமைப்பு வசதிகள், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னையகவுண்டன்வலசு கிராமத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சைவ இலக்கிய வகுப்பு தொடக்க விழா, ஒட்டன்சத்திரத்தில் புதிதாக அமையவிருக்கும் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன், பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையாளா் பாரதி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையாளா் ந. நடராஜன், உதவி ஆணையாளா் செந்தில்குமாா், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, ஒன்றியத் தலைவா்கள் சத்தியபுவனா ராஜேந்திரன், அய்யம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.