‘5 மாதங்களில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், கஞ்சா பறிமுதல்’
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ. 60 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 329 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில், புகையிலைப் பொருள்கள் விற்பனையை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 179 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.28.96 லட்சம் மதிப்பிலான 5178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நடப்பாண்டில் இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 150 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.31.21 லட்சம் மதிப்பிலான 319 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் என 178 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 11 போ் உள்பட 53 போ் இதுவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன் 15) ஒரே நாளில் பல்வேறு இடங்களிலுள்ள தேநீா் கடைகள் மற்றும் பெட்டிகளில் நடத்தப்பட்ட திடீா் சோதனையின்போது புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பலமுறை எச்சரித்தும் தொடா்ந்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த 21 கடைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா் யாராக இருந்தாலும், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தேனி: தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா விற்பனை குறித்து காவல் துறையினா் சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாகவும், இருப்பு வைத்திருந்ததாகவும் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 34 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இவா்களுக்கு ரூ. 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யபட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 17 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளாா்.