முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திருமண ஆசை காட்டி சிறுமியை கொன்றவருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 14th March 2022 10:58 PM | Last Updated : 14th March 2022 10:58 PM | அ+அ அ- |

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சடையாண்டி என்ற சித்திரவேல் மற்றும் அழகுமணி.
நிலக்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி, நகையை பறித்துக் கொண்டு சிறுமியைக் கொலை செய்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், உடந்தையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அடுத்துள்ள வீலிநாயக்கன்பட்டியில், திருமண ஆசை வாா்த்தை கூறி 15 வயது சிறுமியைக் கொலை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த சடையாண்டி என்ற சித்திரவேல் (36) மற்றும் ஆட்டோ ஓட்டுநா் அழகுமணி (51) ஆகிய இருவரையும் போலீஸாா் கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்தனா். விசாரணையில், திருமணத்திற்காக வீட்டிலிருந்த நகைகளுடன் சிறுமியை வரவழைத்த சடையாண்டி, பின்னா் நகைகளை பறித்துக் கொண்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில், சிறுமியை கொலை செய்த சடையாண்டி என்ற சித்திரவேல் என்பவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.40ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். கொலைக்கு உடைந்தையாக இருந்த அழகுமணி என்பவருக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.