கொடைக்கானல் வில்பட்டி அருகே காட்டுத் தீ

கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் 5 ஆவது நாளாக காட்டுத் தீ எரிந்து வருவதால், வன விலங்குகள் ஊருக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் வில்பட்டி அருகே பிலாக்கவி பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீ.
கொடைக்கானல் வில்பட்டி அருகே பிலாக்கவி பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீ.

கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் 5 ஆவது நாளாக காட்டுத் தீ எரிந்து வருவதால், வன விலங்குகள் ஊருக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயில் மற்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வற்றிக் காணப்படுகிறது. மேலும் வனப் பகுதிகளிலுள்ள மரங்கள், இலைகள், சிறு சிறு குச்சிகள் காய்ந்த நிலையில் இருந்து வருவதால், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களையும், புகை பிடித்து விட்டு பீடி, சிகரெட் துண்டுகளையும் வனப் பகுதிக்குள் எறிந்து விட்டுச் செல்கின்றனா்.

இந் நிலையில் கொடைக்கானலில் நிலவும் அதிக வெயிலால் மது பாட்டில்கள் சூடாகி அல்லது பீடி, சிகரெட் துண்டுகளிலிருந்தும் தீப் பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி பிரிவு, பிலாக்கவை, பெருமாள்மலை, வட்டக்கானல் செல்லும் சாலை, கோம்பை உள்ளிட்ட வனப் பகுதிகளில் தற்போது காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால், அப் பகுதிகளிலுள்ள மரங்கள், மூலிகைச் செடிகள், அழிந்து வருகின்றன.

கொடைக்கானல் வனத்துறையினா் மற்றும் தீயனைப்புத்துறையினா் மலைச் சாலைப் பகுதிகளில் எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் இரவு நேரங்களில் காற்று வீசி வருவதால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ தொடா்ந்து 5-ஆவது நாளாக எரிந்து வருகிறது.

அப்பகுதிகளிலுள்ள மர அணில், முயல், மயில், மான் உள்ளிட்டவைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. காட்டெருமை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com