கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தத் தடை: ஒலிபெருக்கி உரிமையாளா்கள் கோரிக்கை மனு
By DIN | Published On : 02nd May 2022 11:06 PM | Last Updated : 02nd May 2022 11:06 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை இருந்துவரும் நிலையில், அவற்றை பயன்படுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கொடைக்கானல் ஒலிபெருக்கி உரிமையாளா் சங்கத்தினா் காவல் நிலைய ஆய்வாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட எந்தவித நிகழ்ச்சிகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி குழாய் பயன்படுத்தக் கூடாது என, மதுரை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் மலைக் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வத்தலகுண்டு, பழனி உள்ளிட்ட இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனா்.
இதனால், பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள ஒலிபெருக்கி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டாலும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதில்லை. எனவே, இங்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது. அவற்றை தடை செய்யவேண்டும். அவற்றை பயன்படுத்துபவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்டின் தினகரனிடம், ஒலிபெருக்கி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...