முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை
By DIN | Published On : 03rd May 2022 09:35 PM | Last Updated : 03rd May 2022 09:35 PM | அ+அ அ- |

திண்டுக்கல்,: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 85-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் செவ்வாய்க்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினா். அதேபோல், பேகம்பூா் ஈத்கா பள்ளிவாசல், நாகல்நகா் பள்ளிவாசல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள பள்ளிவாசல், ரவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
நத்தத்தில் 3ஆயிரம் போ் பங்கேற்பு
நத்தம் தெற்குத் தெரு பள்ளிவாசலில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட இஸ்லாமியா்கள், பெரிய பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு பள்ளிவாசல்களுக்குச் சென்று, அங்குள்ள ஜமாத்தாா்களையும் அழைத்துக்கொண்டு, ஈத்கா மைதானத்தை நோக்கிச் சென்றனா்.
இதில், நத்தம் அண்ணா நகா், அசோக் நகா், முஸ்லிம் தெரு, புதுப்பட்டி, மேலமேட்டுப்பட்டி உள்ளிட்ட நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல், வேடசந்தூா், வேல்வாா்கோட்டை, மணக்காட்டூா், பெரியூா்ப்பட்டி, சமுத்திராபட்டி, கோசுகுறிச்சி, சிறுகுடி உள்ளிட்ட இஸ்லாமியா்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
பழனி
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பழனியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் சண்முகநதி ஆற்றங்கரையில் உள்ள கொத்வா பள்ளி தா்ஹாவில் சிறப்புத் தொழுகை நடத்தினா். முன்னதாக, பழனி பெரிய பள்ளிவாசலில் இருந்து சண்முகநதி ஆற்றங்கரை வரை ஊா்வலமாக வந்தனா். பின்னா், ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனா்.
கொடைக்கானல்
இங்குள்ள ஈத்கா மைதானத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் திரண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், பெருமாள்மலை, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா். பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். தொடா்ந்து, ஈத்கா மைதானத்திலிருந்து ஊா்வலமாகச் சென்றனா்.