திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th May 2022 01:22 AM | Last Updated : 07th May 2022 01:22 AM | அ+அ அ- |

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு முன், நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக மாவட்டச் செயலா் சச்சிதானந்தம் கூறியதாவது: தொப்பம்பட்டி, வேடசந்தூா், வடமதுரை, திண்டுக்கல் நகா் உள்ளிட்ட ஒன்றியங்களில் நீா்நிலை புறம்போக்கு, கோயில் மானிய நிலங்கள் உள்ளிட்ட பல்வகை புறம்போக்கு நிலங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனா். இதனிடையே புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் குடும்பங்களை நீதிமன்ற உத்தரவு என காரணம் காட்டி அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏழை குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும்.
தமிழக அரசு நீதிமன்றத்தில் உரிய வகையில் மேல்முறையீடு செய்து ஏழை குடும்பங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தடுப்பதற்கும், குடியிருந்து வருவோருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீடற்ற இதர குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்ட இடங்கள், கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. அழற்றையும் பதவியேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் அரபு முகமது, ஒன்றியச் செயலா் சரத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.