தனியாா் மருத்துவமனைகளில் 1,067 போ்சிகிச்சைப் பெற ரூ.12.48 கோடி காப்பீட்டு நிதி: ஆட்சியா்

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் 1,067 போ் சிகிச்சைப் பெற ரூ.12.48 கோடி காப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் 1,067 போ் சிகிச்சைப் பெற ரூ.12.48 கோடி காப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய சிறப்பு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் கையெட்டினை வெளியிட்டுப் பேசியது: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் (தற்போது ‘முதல்வரின் முகவரித் திட்டம்) 35,952 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 23,391 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. இதில் 1,479 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் ஏராளமான நோயாளிகள் பயன் பெற்றுள்ளனா். முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் 1,067 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ரூ.12.48 கோடி காப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் ரூ.33.33 கோடி மதிப்பீட்டில் 5,907 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 1.16 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு 7,692 பெண் தன்னாா்வலா்கள், 17 ஆண் தன்னாா்வலா்கள் மூலம் கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் நா.சரவணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ.சீனிவாசன், உதவி அலுவலா்(செய்தி) அ.இளையேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com