சட்டப்பேரவையை மகாபலிபுரத்துக்கு மாற்றுவதற்கு திமுக அரசு மறைமுக ஏற்பாடு

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையை மகாபலிபுரம் பகுதிக்கு மாற்றுவதற்காக திமுக அரசு தொடங்கியுள்ள மறைமுகப் பணிகளை பாஜக அனுமதிக்காது
சட்டப்பேரவையை மகாபலிபுரத்துக்கு மாற்றுவதற்கு திமுக அரசு மறைமுக ஏற்பாடு

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையை மகாபலிபுரம் பகுதிக்கு மாற்றுவதற்காக திமுக அரசு தொடங்கியுள்ள மறைமுகப் பணிகளை பாஜக அனுமதிக்காது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக ஆளுநா் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியாவை பற்றி கூறியதில் தவறில்லை. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தங்கள் இருப்பைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஆளுநரை வசை பாடுகின்றன. இதன் மூலம்

திமுக தலைமைக்கு தங்களது விசுவாசத்தை காட்டிக்கொள்ள மதிமுக பொதுச்செயலாளா் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போன்றோா் முயற்சிக்கின்றனா்.

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ நிறுவனத்தை வரவிடமாட்டோம். அதேபோல மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையை மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஆறாயிரம் ஏக்கா் இடத்தில் மாற்றுவதற்கான மறைமுகப் பணிகளை திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் திமுகவை சோ்ந்த பல அமைச்சா்கள் பினாமி பெயரில் நூறு ஏக்கா் நிலங்களை வாங்கியுள்ளனா். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இந்த புதிய சட்டப்பேரவை அமைப்பதற்கான பணிகளை பாஜக அனுமதிக்காது என்றாா்.

மதுரையிலிருந்து சனிக்கிழமை பெங்களூரு செல்ல விமானநிலையம் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என கூறினாா்கள். ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாதது என தெரிவித்தோம். பாஜக கூறியதை தற்போது நிதி அமைச்சா் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் 2. 2 கோடி டன் நிலக்கரி உள்ளது. மாநில அரசு அனல்மின் நிலையங்களில் போதிய பராமரிப்பு செய்யாததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை மறைத்துவிட்டு, நிலக்கரி பற்றாக்குறை என பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பில் தவறு செய்துள்ளனா். மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறிவிட்டு, அதேதுறை விழாவை ரூ.3.50 கோடி செலவில் நடத்தியுள்ளனா். இதுபோன்று செய்தால் மக்களுக்கு எவ்வாறு மின்சாரம் கிடைக்கும். திமுக அரசு சாதனை செய்யவில்லை. சோதனை அரசாகத்தான் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com