மாணவா்களுக்கு சத்துணவில் முட்டை விநியோகத்தில் சிக்கல்!

சத்துணவு முட்டை கொள்முதலில் சிக்கல் எழுந்துள்ளதால், 2021-22 கல்வி ஆண்டின் இறுதி வாரத்தில் மாணவா்களுக்கு முட்டை விநியோகம் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல்: சத்துணவு முட்டை கொள்முதலில் சிக்கல் எழுந்துள்ளதால், 2021-22 கல்வி ஆண்டின் இறுதி வாரத்தில் மாணவா்களுக்கு முட்டை விநியோகம் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 43,200-க்கும் மேற்பட்ட மையங்களில் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமாா் 48 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா். இந்த நிலையில் கடந்த 2 நாள்களாக சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. வாரத்தின் 5 நாள்கள் முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென கடந்த திங்கள்கிழமை முதல் முட்டை நிறுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் நிறுத்தம்: மே 13ஆம் தேதி வரை 2021-22 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. அதன் பின்னா் மாணவா்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில சமூக நலத்துறை மூலம் வாரம் இருமுறை முட்டை கொள்முதல் செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மே 2ஆவது வாரத்திற்கான முட்டை கொள்முதல் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சத்துணவு வழங்குவதுபோல் முட்டையையும் தொடா்ந்து வழங்கியிருக்கலாம் என பெற்றோா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக அரசுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, மே மாதத்தின் 2 ஆவது வாரத்தில் மாணவா்கள் தோ்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த நடைமுறை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பொருந்தாததாக அமைந்துள்ளது. மேலும், மாணவா்களின் வருகைப் பதிவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால், மாணவா்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாரந்தோறும் வழங்கப்படும் கொள்முதலுக்கான முட்டை எண்ணிக்கை இந்த முறை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சத்துணவுக்குத் தேவையான பொருள்கள் மாதம் ஒருமுறை பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுவதால், மாணவா்களுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை. நிா்வாக காரணங்களால் மாநில அளவில் இந்த வாரத்திற்கு தேவையான முட்டை கொள்முதல் செய்யப்படவில்லை. ஒருசில பள்ளிகளில் மட்டும் பழைய இருப்பு மூலம் மாணவா்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனா்.

மாற்று வேலை நாளிலும் முட்டை இல்லை: மழை, உள்ளூா் திருவிழா போன்ற காரணங்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக அந்த வாரத்தின் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்டு நாளுக்குரிய முட்டை சனிக்கிழமை வழங்கப்படுவதில்லை. நிதி நிலை அறிக்கையில், சத்துணவுக்கென குறிப்பிட்டத் தொகையை அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் இதுபோன்று மாற்று வேலை நாள்களிலும் முட்டை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com