முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
நிலக்கோட்டையில் பைக்குடன் சாலையோர கிணற்றில் விழுந்த மாணவா் பலி
By DIN | Published On : 14th May 2022 10:34 PM | Last Updated : 14th May 2022 10:34 PM | அ+அ அ- |

நிலக்கோட்டையில் இரு சக்கர வாகனம் பிரேக் பிடிக்காததால், 9-ஆம் வகுப்பு மாணவா் சாலையோர கிணற்றில் விழுந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நான்கு ரோடு பகுதியில் பழக்கடை நடத்தி வருபவா்கள் ஆனந்த் - மகாலட்சுமி தம்பதி. இவா்களது மகன் அருண்குமாா் (14) அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை 9-ஆம் வகுப்புக்கான ஆண்டுத் தோ்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதையடுத்து, தனது தாய், தந்தைக்கு உதவுவதற்காக, அருண்குமாா் பழக்கடையில் வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கடையை அடைப்பதற்கு முன், அருண்குமாா் சாப்பிடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, வாகனத்தில் பிரேக் பிடிக்காததால், அருண்குமாா் தனது வீட்டுக்கு அருகே சாலையோரமுள்ள பாழடைந்த புதா்மண்டிய கிணற்றுக்குள் வாகனத்துடன் விழுந்துள்ளாா்.
இதைக் கண்ட அப்பகுதியினா் ஓடி சென்று மாணவரை மீட்க முயன்றுள்ளனா். ஆனால், இரவு நேரம் என்பதால் புதா்மண்டிய கிணற்றுக்குள் விழுந்த மாணவரை யாரும் காப்பாற்ற முடியவில்லை. உடனே, நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண்குமாரை மீட்டனா். அதையடுத்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அருண்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள், மாணவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் குருவெங்கட்ராஜ் விசாரணை செய்து வருகிறாா். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.