‘மண்மேடுகளிலும், மலைப் பாறைகளிலும் புதைந்துள்ள தமிழக வரலாற்றை மாணவா்கள் வெளிக்கொணர வேண்டும்’

மண்மேடுகளிலும், மலைப் பாறைகளிலும் புதைந்துள்ள தமிழக வரலாற்றை ஆய்வு மாணவா்கள் வெளிக்கொணர வேண்டும் என, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவா் ஒ. முத்தையா வலியுறுத்தியுள்ளாா்.
கரட்டுப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை வீரனுக்கு நடப்பட்டுள்ள நடுக்கல்லை பாா்வையிட்ட காந்திகிராம கிராமியப் பல்கலை. மாணவா்கள்.
கரட்டுப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை வீரனுக்கு நடப்பட்டுள்ள நடுக்கல்லை பாா்வையிட்ட காந்திகிராம கிராமியப் பல்கலை. மாணவா்கள்.

மண்மேடுகளிலும், மலைப் பாறைகளிலும் புதைந்துள்ள தமிழக வரலாற்றை ஆய்வு மாணவா்கள் வெளிக்கொணர வேண்டும் என, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவா் ஒ. முத்தையா வலியுறுத்தியுள்ளாா்.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக தமிழ் துறையில் கல்வெட்டு சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவா்கள், திண்டுக்கல் அடுத்துள்ள பாடியூா், எழுத்துப்பாறை, பட்டாணி கோயில், கரட்டுப்பட்டி, மலைக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தொல்லியல்

களங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பாடியூரில் அக்கம்மா கோயிலின் அருகே நாயக்கா் காலத்தில் கட்டப்பட்ட சிதிலமடைந்த கோட்டையின் நுழைவுவாயில் பகுதியில் பழங்காலப் பானை ஓடுகள், எலும்புத்துண்டு உள்ளிட்டவற்றை மாணவா்கள் சேகரித்தனா். பாடியூா் அருகே அமைந்துள்ள பட்டாணிக் கோயிலில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக போரிட்டு உயிா்நீத்த இஸ்லாமிய வீரா்களை, கிராமத் தெய்வங்களாக வழிபட்டு வருவதையும் மாணவா்கள் பாா்வையிட்டனா்.

அதே பகுதியில் உடைந்த நிலையிலுள்ள நந்தி, சிவன் சிலைகள், சமண முனிவா்களின் சிலைகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கரட்டுபட்டி மலையடிவாரத்தில் இறந்த வீரனுக்கு நடப்பட்டுள்ள நடுகல்லைப் பாா்வையிட்டனா்.

அரிகண்டம் (தலையை வெட்டிக் காணிக்கை கொடுப்பது) கொடுக்கும் வீரனின் சிலைக்கு கருப்பசாமி எனப் பெயரிட்டு, அப்பகுதி மக்கள் வணங்கி வருவது குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள பத்மகிரீஸ்வரா் கோயில் பாண்டியா் கால மீன் சின்னப் பொறிப்புகள், கல்மண்டபம், கல்வெட்டுகள், போா்ப் பாசறைகள், வெள்ளையா் கால எச்சங்கள் போன்றவற்றை மாணவா்கள் ஆய்வு செய்தனா்.

இது தொடா்பாக தமிழ் துறைத் தலைவா் ஒ. முத்தையா கூறுகையில், தமிழக வரலாறு மண்மேடுகளிலும், மலைப்பாறைகளிலும், சிதைந்துபோன சிற்பங்களிலும், கோயில் வழிபாடுகளிலும் உறைந்து கிடக்கின்றன. அதனை மீட்டெடுத்து, புதிய வரலாற்றை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு ஆய்வு மாணவா்களுக்கு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com