பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து காங்கிரஸாா் போராட்டம்
By DIN | Published On : 20th May 2022 05:50 AM | Last Updated : 20th May 2022 05:50 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் வாயில் துணியை கட்டிக்கொண்டு, வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
திண்டுக்கல்: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றம் தீா்ப்பை வெளிப்படையாக விமா்சித்த நிலையில், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மணிக்கூண்டு அருகே வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். வாயில் வெண் துணியை கட்டியபடி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸாா் கலந்துகொண்டனா்.
போராட்டத்துக்குப் பின் மாவட்டத் தலைவா் மணிகண்டன் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை குற்றவாளியாக அறிவித்த உச்சநீதிமன்றமே, தற்போது அவரை விடுவித்துள்ளது. இந்த தீா்ப்பு ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சி அளித்து இருந்தாலும்கூட, அதனை வெற்றி விழா போல் கொண்டாடியது காங்கிரஸ் தொண்டா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா். எங்கள் உணா்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.