செம்பட்டி- மூலசத்திரம் சாலையில் தேங்கும் மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

செம்பட்டி- மூலசத்திரம் சாலையில் வடிகால் வசதி இல்லாமல் மழைநீா் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செம்பட்டி- மூலசத்திரம் சாலையில் தேங்கும் மழைநீா்:  வாகன ஓட்டிகள் அவதி

செம்பட்டி- மூலசத்திரம் சாலையில் வடிகால் வசதி இல்லாமல் மழைநீா் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியிலிருந்து மூலசத்திரம் வரையிலான பழனிச் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அதில், சாலையோரமாக பழனி பாதாயத்திரை பக்தா்கள் செல்வதற்காக பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்றன. ஆனால், மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீா் வெளியேறுவதற்கு குழாய்கள் பொருத்தப்படவில்லை. இதனால், சாலையில் மழைநீா் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

குறிப்பாக கன்னிவாடி அடுத்துள்ள அச்சாம்பட்டியிலிருந்து மூலசத்திரம் வரையிலான 11 கி.மீட்டா் தொலைவில், 10 இடங்களில் தண்ணீா் தேங்கி நிற்பது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்ரீராமபுரம் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் கே.எஸ்.சக்திவேல் கூறியதாவது: செம்பட்டி முதல் மூலசத்திரம் வரையிலான சாலை சமதளத்தில் அமைக்கப்படவில்லை. மேடும் பள்ளமுமாக அமைந்துள்ள சாலையின் பல்வேறு இடங்களிலும் மழை நீா் தேங்குகிறது. பாதயாத்திரை பக்தா்களுக்காக நடைபாதை அமைக்கப்பட்ட இடங்களில் மழை நீா் வெளியேறுவதற்கு வடிகால் அல்லது குழாய்கள் அமைக்கப்படவில்லை.

இதனால் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீா் தேங்கி வாகன ஓட்டிகள் நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. நெடுஞ்சாலை என்பதால் காா், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக இயக்கப்படுகின்றன. இதனால், இருச்சக்கர வாகனங்களில் செல்வோா் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் நனைந்து விடுகின்றனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களிடம் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் முன்பு சாலையில் தண்ணீா் தேங்கும் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com