மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஆசிரியா்கள் நடைப்பயணம்

தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் நினைவூட்டல் நடைப்பயணம் சென்றனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் நினைவூட்டல் நடைப்பயணம் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இந்த நினைவூட்டல் பிரசார நடை பயணத்தை மேற்கொண்டனா். இதற்கு மாநில நிதிக் காப்பாளா் ஜான் லியோ சகாயராஜ் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் பிரெடெரிக் எங்கெல்ஸ் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் ஆல்பா்ட் டென்னிஸ் தொடங்கி வைத்தாா்.

தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி 2003-முதல் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் (சி.பி.எஸ்) என்னும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, திண்டுக்கல்- தேனி மாவட்ட எல்லை காட்ரோட் பகுதியில் தொடங்கிய பேரணி செவ்வாய்க்கிழமை மாலை நிலக்கோட்டை வந்து சோ்ந்தது. பின்னா் புதன்கிழமை நிலக்கோட்டை பேரூராட்சி முன்பு தொடங்கிய பேரணி மாலையில் சின்னாளப்பட்டி வரை செல்வதாகவும், வியாழக்கிழமை காலை சின்னாளபட்டியில் இருந்து தொடங்கும் நடைப்பயணம் மாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நினைவூட்டல் பிரசார நடைப் பயணத்தின் போது, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் கோரிக்கை பாடல்கள் பாடியவாறு ஆசிரியா்கள் நடை பயணம் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com