தமிழறிஞா்களை நினைவுகூரும் வகையில் அக்.19 இல் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்
By DIN | Published On : 13th October 2022 01:32 AM | Last Updated : 13th October 2022 01:32 AM | அ+அ அ- |

சுப்பிரமணியம் சிவா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட தமிழறிஞா்களை நினைவுகூரும் வகையில் அக்.19ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறையின் திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளூா் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து சுப்பிரமணியம் சிவா, மாயூரம் வேதநாயகம்பிள்ளை, ஐராவதம் மகாதேவன், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை ஆகிய தமிழறிஞா்கள் பிறந்தநாளன்று அவா்களது இலக்கியப் பணி, தமிழ்த் தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இலக்கியக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அந்த இலக்கியக் கூட்டம், திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிா் கலைக் கல்லூரியிலுள்ள காமராஜ் அரங்கில் அக்.29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழறிஞா்கள் குறித்து தமிழறிஞா்கள் கருத்துரையாற்ற உள்ளனா். மாவட்டத்திலுள்ள இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், தமிழறிஞா்கள், எழுத்தாளா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்கலாம்.
இதை முன்னிட்டு அக்.19ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவா்களுக்கு, சுப்பிரமணிய சிவா என்னும் தியாக சீலா், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் தமிழ்த் தொண்டு, ஐராவதம் மகாதேவனின் தமிழ்த் தொண்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையின் பங்கு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.
இதேபோல, கல்லூரி மாணவா்களுக்கு, சுப்பிரமணியம் சிவாவின் விடுதலைப் போராட்டப் பயணம், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் தமிழ்ப் பணிகள், ஐராவதம் மகாதேவனின் தொல்லியல் ஆய்வு, நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் தமிழ்த் தொண்டு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், முறையே தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரின் பரிந்துரை படிவத்துடன் அனுமதி பெற வேண்டும். வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் அக்.29ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றாா்.