சுகாதாரச் சான்று, தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

பழனி நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் சுகாதாரம், தொழில் உரிமச் சான்றுகளைப் பெறாத கடைகள், தொழில் நிறுவனங்களுக்குச் ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் அலுவலகத் தரப்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:
பழனி நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்கள், உணவகங்கள், தேநீா்க் கடைகள், பேக்கரிகள், சிறு, குறுந் தொழில் நடத்துபவா்கள், பஞ்சாமிா்த விற்பனை நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், மடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட தொழில் உரிமையாளா்கள் பழனி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து சுகாதாரச் சான்று, தொழில் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.