குப்பையில்லா நகராட்சியாக ஒட்டன்சத்திரம் மாற்றப்படும்: அமைச்சா் அர. சக்கரபாணி
By DIN | Published On : 24th January 2023 03:37 AM | Last Updated : 24th January 2023 03:37 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையில்லா நகராட்சியாக மாற்றப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனிச் சந்தையில் புதிய வளாகம் கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 21.25 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இதில், 122 கடைகள், 110 அலுவலக அறைகள், 2 ஏடிஎம் இயந்திரங்கள், ஒரு உணவு விடுதி, 5 காத்திருப்புக் கூடங்கள், கண்காணிப்புக் கேமரா வசதி, குடிநீா், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நடைபெற்ற பூமி பூஜைக்கு, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா்.
உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு தினசரி 1,000 முதல் 1,500 டன் காய், கனிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காய், கனிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் குளிா்பதனக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.
இதேபோல, விருப்பாட்சியில் செயல்படும் தொழில் பயிற்சி நிலையத்துக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படும். சத்திரப்பட்டியில் சாா்-பதிவாளா் அலுவலகம் ரூ. 2 கோடி மதிப்பீட்டிலும், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் ரூ. 3 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ளது. காப்பிலியபட்டி ஊராட்சியில் 20 ஏக்கா் நிலத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாள்களில் அப்பணிகள் நிறைவடைந்து விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும். அப்போது, ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையில்லா நகராட்சியாக மாறும் என்றாா் அவா்.
இதில், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, மதுரை மண்டல நகராட்சி செயற்பொறியாளா் மனோகரன், பழனி கோட்டாட்சியா் ச. சிவக்குமாா், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, நகராட்சி ஆணையாளா் சக்திவேல், ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் சி. ராஜாமணி, துணைத் தலைவா் இரா. ஜோதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.