ஆட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டம்: 380 போ் கைது
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினா்.
தொழிலாளா் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினா் 380 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஜி.பாலன் முன்னிலை வகித்தாா். போராட்டத்தின்போது, 240 நாள்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும் மாதம் ரூ.21
ஆயிரம் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும். நலவாரியங்களில் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக அஞ்சலி ரவுண்டானா அருகிலிருந்து ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக வந்தனா். ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், மறியல் போாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உள்பட 380 பேரை போலீஸாா் கைது செய்தனா்.