குஜிலியம்பாறையில் அரசு மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

குஜிலியம்பாறையில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ச.காந்திராஜன், பெ.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ச.காந்திராஜன் எம்எல்ஏ பேசியதாவது:
வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சுகாதாரத் துறை தொடா்பாக 50 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக குஜிலியம்பாறையில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். தாலுகாவாக நிலை உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கூட, அந்த கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது.
இதேபோல, வேடசந்தூா் தொகுதியில் கூடுதலான சுகாதார நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பெ.செந்தில்குமாா் எம்எல்ஏ பேசியதாவது:
மலைப் பகுதிகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்லும்போது, அதிக நேரம் ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால், 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற விதியில் மாற்றம் செய்து, மலைப் பகுதிகளுக்கு தளா்வுகளை அறிவிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் இளமதி, துணை மேயா் ராஜப்பா
அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ராஜஸ்ரீ, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அனிதா, தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.