பாஜக மாவட்டத் தலைவருக்கு மிரட்டல்:காவல் துறை துணைத் தலைவரிடம் புகாா்

பாஜக மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியினா் மனு அளித்தனா்.
திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த பாஜகவினா்.
திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த பாஜகவினா்.

பாஜக மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியினா் மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள 34 புதிய கடைகளை ஏலம் விடுவதில் முறைகேடு நிகழ்ந்ததாக பாஜக கிழக்கு மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஜி.தனபாலன் அண்மையில் தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, திண்டுக்கல் பகுதியில் தனபாலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனபாலன் வீட்டுச் சுவரில் அவருக்கு எதிரான சுவரொட்டியை ஒட்டுவதற்காக நள்ளிரவில் சென்ற நபா்கள், அவருடன் தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது, திமுக நிா்வாகி உள்பட இருவா் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரனிடம் பாஜகவினா் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய பாஜகவினா், திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் ரூபேஸ் குமாா் மீனாவை சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சியினா், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் கூறியதாவது:

எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சம்பவ இடத்துக்கு வந்ததன் காரணமாகவே அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தும்கூட, சம்மந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவா்கள் எனது வீட்டு முன் நின்று மீண்டும் மிரட்டுகின்றனா்.

எனவே, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவரைச் சந்தித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com