கொடைரோட்டில் ரயில்கள் நின்று செல்லும் சேவை மத்திய இணையமைச்சா் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 15th June 2023 10:18 PM | Last Updated : 15th June 2023 10:18 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூா், கச்சகவுடா ஆகிய 2 ரயில்கள் நின்று செல்லும் சேவையை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுசாமி ஆகியோா் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சிக்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தாா். பின்னா், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது:
ஒடிஸாவில் சமீபத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக நிவாரணங்களை மத்திய அரசு வழங்கியது. 51 மணி நேரத்தில் அதே பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை, ராமேசுவரம், காட்பாடி, சென்னை எழும்பூா், கன்னியாகுமரி ரயில் நிலையங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக, முதல் தவணையாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிரதமா் மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. கிசான் சம்மான் நிதி உள்பட விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வழங்கி வருகிறாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூா் பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.செல்வராஜ், துணைத் தலைவா் விமல்குமாா், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட திமுக பொருளாளா் சத்தியமூா்த்தி, துணைச் செயலா் நாகராஜன், நிலக்கோட்டை ஒன்றியச் செயலா் மணிகண்டன், அம்மையநாயக்கனூா் பேரூா் செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.