தலைமறைவான வட்டாரக் கல்வி அலுவலருக்கு குறிப்பாணை

தோ்தல் பணிகளை புறக்கணித்துவிட்டு, கடந்த 10 நாள்களாக தலைமறைவாக இருந்து வரும் குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலருக்கு மாவட்டக் கல்வி அலுவலா் தரப்பில் விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலரான தங்கமணி கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி விடுமுறை கேட்டாா். தோ்தல் நேரத்தில் விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில், 10 நாள்களாக தகவல் தெரிவிக்காமலேயே விடுப்பில் சென்றுவிட்டாராம்.

இதனிடையே, தங்கமணியின் கணவா் ராஜினின் சகோதரரான செல்வராஜ், ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகாா் அளித்தாா். அதில், தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய வட்டாரக் கல்வி அலுவலா் தங்கமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிந்தாா். மேலும், தாக்குதல் சம்பவம் தொடா்பாக, குஜிலியம்பாறை காவல் நிலையத்திலும் செல்வராஜ் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வட்டாரக் கல்வி அலுவலா் தலைமறைவாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செல்வராஜ் அளித்த புகாருக்கு, விளக்கம் அளிக்கக் கோரி ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தரப்பில் பதிவு தபால் மூலம் வட்டாரக் கல்வி அலுவலா் தங்கமணிக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com