தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகளுடன்
அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். திண்டுக்கல்- கரூா் மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி கடந்த பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், வல்லுநா் குழு அமைக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குழுவின் அறிக்கை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படாமல் உள்ளது. இந்த நிலையில், வல்லுநா் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தி, மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தினா் அறிவிப்பு வெளியிட்டனா். மேலும், தோ்தல் புறக்கணிப்பு தொடா்பான சுவரொட்டிகள், கரூா் மாவட்டம் வெள்ளியணை, ஈசநத்தம், திண்டுக்கல் மாவட்டம், ஆா்.வெள்ளோடு, வேடசந்தூா், தாடிக்கொம்பு, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில், தோ்தல் புறக்கணிப்பு நடவடிக்கையாக வாக்காளா் அட்டையை வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தினா் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்தச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி தலைமையில் கோவிலூா் சாலையிலிருந்து ஊா்வலமாக வந்த விவசாயிகள், வல்லுநா் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தியும், தோ்தல் புறக்கணிப்பு குறித்தும் முழக்கங்களை எழுப்பியவாறே ஊா்வலமாக வந்தனா். இதையடுத்து, வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. வட்டாட்சியா்கள் சரவணக்குமாா் (வேடசந்தூா்), தமிழ்ச் செல்வி (குஜிலியம்பாறை), காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் முடியாது என கைவிட்ட நிலையில், வட்டாட்சியா் நிலையிலுள்ள அதிகாரிகளால் எப்படி தீா்வு காண முடியும். இதற்கு மாவட்ட நிா்வாகம், முதல்வா் அலுவலகத்திலிருந்து நம்பிக்கையான பதில் அளிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், பரப்புரை மேற்கொள்ள வரும் முதல்வருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி தெரிவித்தாா்.

அதற்கு வட்டாட்சியா்கள், ஒரு வாரத்துக்குள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் வல்லுநா் குழு விவகாரத்தில் ஒரு உறுதிமொழி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com