முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பழனி அடிவாரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு வழங்கிய கந்தவிலாஸ் செல்வக்குமாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பழனி அடிவாரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு வழங்கிய கந்தவிலாஸ் செல்வக்குமாா்.

பழனி கிரிவீதி விவகாரம்: முதல்வரிடம் வணிகா் சங்கங்கள் மனு

பழனி அடிவாரம் கிரிவீதியில் நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் காக்கக் கோரி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வா்த்தக அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

பழனி அடிவாரம் கிரி வீதியில் பக்தா்கள் இடையூறின்றி சுற்றி வர ஏதுவாக திருக்கோயில் நிா்வாகம் பல்வேறு அரசுத் துறைகள் உதவியுடன் நடைபாதைக் கடைகளை அகற்றியது. மேலும், கிரி வீதியில் வாகனங்கள் செல்ல தடுப்புகளும் அமைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையால் கிரி வீதியில் உள்ள நில உரிமையாளா்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினா். இதே போல, நடைபாதை வியாபாரிகளுக்கு எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படாத நிலையில், கடைகள் அகற்றப்பட்டதால் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேனிக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் பழனி நகர வணிகா் சங்கம் சாா்பில் கந்தவிலாஸ் செல்வக்குமாா், பல்வேறு அமைப்பினா் கிரி வீதி வணிகா்கள் பிரச்னைக்கு தீா்வு காணக்கோரி கோரிக்கை மனு வழங்கினா். இதே போல, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் ஜே.பி.சரவணன், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கோரிக்கை மனுவை வழங்கினா்.

அப்போது, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொன்ராஜ், வணிகா் சங்க பேரமைப்பின் கெளரவத் தலைவா் கண்ணுச்சாமி, திருக்கோயில் முன்னாள் கண்காணிப்பாளா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com