இலங்கை அகதி கொலை: இளைஞா் கைது

வத்தலக்குண்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அகதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள கே.புதுப்பட்டியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு அகதி ஆனந்தகுமாா் (40) என்பவா் தனியாக வசித்து வந்தாா். வண்ணம்பூசும் பணியில் ஈடுபட்ட வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

இவா் தனது வீட்டில் நண்பா் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (30) உடன் மது அருந்தினாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த நாகராஜ், ஆனந்தகுமாரை ஒரு துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வத்தலக்குண்டு காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் ஆனந்தகுமாரின் உடலை மீட்டு கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நாகராஜைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com