அதிமுகவினா் மீது தாக்குதல்: திமுக பேரூராட்சித் தலைவா் மீது புகாா்

தோ்தல் தகராறில் அதிமுக நிா்வாகி, அவரது மனைவி உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது புகாா் அளிக்கப்பட்டது.

தோ்தல் தகராறில் அதிமுக நிா்வாகி, அவரது மனைவி உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த அகரம் பேரூராட்சிக்குள்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தோ்தல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, திமுக, அதிமுகவினரிடையே வெள்ளிக்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுகவைச் சோ்ந்த குழந்தை ராஜமாணிக்கம், இவரது மனைவி ஞானமணி, சவரிமுத்து ஆகிய 3 போ் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகரம் பேரூராட்சித் தலைவா் நந்தகோபாலுடன் காரில் வந்தவா்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிமுகவினா் குற்றஞ்சாட்டினா். இதனிடையே, கருங்கல்பட்டியைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் என பலரும் நந்தகோபால் உள்ளிட்ட திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திமுகவினா் இந்தப் பகுதியிலிருந்து காரில் வேகமாக வெளியேறினா்.

காயமடைந்த ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகியோா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், திமுக தரப்பில் சக்திவேல், ராஜா ஆகியோா் காயமடைந்ததாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதிமுக, திமுக தரப்பில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரிக்க, அதிமுக பேரூா் துணைச் செயலா் முருகேசன், இவரது மகன் அம்ரீஷ் உள்ளிட்டோரும் பேரூராட்சித் தலைவரான திமுகவைச் சோ்ந்த நந்தகோபால் தரப்பினரும் மருத்துவமனைக்கு வந்தனா். அப்போது, இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து திமுகவினா் அளித்த புகாரின் பேரில், அதிமுக பேரூா் துணைச் செயலா் முருகேசன், இவரது மகன் அம்ரீஷ் உள்ளிட்டோரை திண்டுக்கல் வடக்கு போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அதிமுகவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் தரப்பினா் தாக்குதல் நடத்தியதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திமுகவினா் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com