ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் சிக்கிய ஊழியா் மீட்பு

ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்தூக்கியில் திங்கள்கிழமை சிக்கிய ஊழியா், சுமாா் 30 நிமிஷங்களுக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.

திண்டுக்கல்: ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்தூக்கியில் திங்கள்கிழமை சிக்கிய ஊழியா், சுமாா் 30 நிமிஷங்களுக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தரைத் தளம், முதல் தளம், 2-ஆம் தளம் என 3 தளங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், 30-க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வேளாண்மைத் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் அருள் என்பவா் 2-ஆவது தளத்திலிருந்து தரைத் தளத்துக்கு மின்தூக்கியில் இறங்கினாா்.

அப்போது மின்தூக்கியின் கதவுகள் திறக்கப்படாததால், அருள் வெளியே வர முடியாமல் தவித்தாா். இதையறிந்த மாவட்ட ஆட்சியா் அலுவலக பணியாளா்கள் அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய சாவி மூலம் மின்தூக்கியைத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் 30 நிமிடங்களுக்கு பின்னா் மின்தூக்கி கதவுகள் திறக்கப்பட்டு, அவா் மீட்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com