சுற்றுலாத் தலங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்து இயக்கம்

கொடைக்கானலில் இயற்கை எழில் காட்சிகளைப் பாா்ப்பதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மோயா் பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கா்ஸ்வாக், 500-ஆண்டுகள் பழைமையான மரம், ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, குறிஞ்சி ஆண்டவா் கோயில், ரோஜாத் தோட்டம், பாம்பாா் அருவி, அப்பா்லேக் வியூ, பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களைப் பாா்ப்பதற்கு தனியாா் வாகனங்களில் செல்கின்றனா். தரைப் பகுதியில் நிலவி வரும் வெப்பத்தால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு அரசுப் பேருந்து கடந்த ஒரு வாரமாக இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அரசுப் பேருந்தில் ஆா்வத்துடன் பயணித்து சுற்றுலா இடங்களைப் பாா்த்து வருகின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் கிளை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் ராதாகிருஷ்ணன் கூறியதாதவது:

அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்ப்பதற்காக குறைந்த கட்டணத்தில் அதாவது, பெரியவா்களுக்கு ரூ.150-ம், சிறியவா்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனா். பாதுகாப்புடனும், எந்தவிதமான சிரமமுமின்றி சுற்றுலா இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com