பேரூராட்சி திமுக கவுன்சிலா் மகள் கடத்தல்: ஆட்சியா் முகாம் அலுவலகம் முன் முற்றுகை

பேரூராட்சி திமுக கவுன்சிலா் மகள் கடத்தல்: ஆட்சியா் முகாம் அலுவலகம் முன் முற்றுகை

பேரூராட்சி திமுக பெண் உறுப்பினரின் மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கட்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (43). இவரது மனைவி அமுதா (33), பாளையம் பேரூராட்சி 10-ஆவது வாா்டு திமுக உறுப்பினா். இவரது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவி, வீட்டுக்குத் திரும்பவில்லை.

இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் குமாா் புகாா் அளித்தாா்.

ஆனாலும், புதன்கிழமை காலை வரை போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, குமாா், அமுதா தம்பதியினா் தங்களது உறவினா்கள், கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோருடன் திண்டுக்கல்லுக்கு வந்தனா். பேருந்து நிலையம் அருகிலுள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை அவா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து பாளையம் பேரூராட்சி உறுப்பினா் அமுதா கூறியதாவது:

எனது மகள் குஜிலியம்பாறையிலுள்ள பள்ளிக்கு நாள்தோறும் அரசுப் பேருந்தில் சென்று வருகிறாா். வழக்கம் போல, செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கட்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த 4 போ் அவரைக் கடத்தியதாகக் கூறுகின்றனா். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எனது மகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா்.

இதனிடையே, கடத்தப்பட்ட சிறுமியை மீட்க வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் துா்காதேவி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com