ஐஸ்கிரீமில் நைட்ரஜன் வாயு: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

ஐஸ்கிரீம் வகைகளில் நைட்ரஜன் வாயு பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் பாா்வையாளா்கள், விருந்தினா்களுக்கு உணவுப் பரிமாறப்படுவதை போன்று பஞ்சுமிட்டாய், சோளப் பொறி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட தின்பண்டங்களும் விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இந்த தின்பண்டங்கள் உள்ளன. இந்த ஐஸ்கிரீம் வகைகளில் சிலா் நைட்ரஜன் வாயுவை மைனஸ் 300 டிகிரி பாரன்ஹீட் குளிா் நிலையில் பனிக் கட்டியாக பயன்படுத்துகின்றனா்.

இந்த நைட்ரஜன் பனிக் கட்டி கலந்த ஐஸ்கிரீம், ஸ்மோக் பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்களை உண்ணும்போது, அவா்களின் வாய் வழியாக வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது. இதே போல, சிறுவன் ஒருவன் நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட் உள்கொண்டதும் மூச்சு விட முடியாமல் உயிரிழந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நைட்ரஜன் கலந்த ஐஸ்கிரீம், ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யப்படுவதையும், விழாக்களில் இலவசமாக விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்கும் பணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

உணவு பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோா் திண்டுக்கல் நகா், புகா், கன்னிவாடி, வத்தலகுண்டு பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளிலும், ஐஸ்கிரீம் தயாரிப்புக் கூடங்களிலும் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பொருள்களில் நைட்ரஜன் வாயு பயன்படுத்துவது முற்றிலும் ஆபத்தானது. இதையும் மீறி பயன்படுத்தப்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com