கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு
மண் மாதிரி சேகரிக்க பயிற்சி

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு மண் மாதிரி சேகரிக்க பயிற்சி

திண்டுக்கல், ஏப்.26: கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புகளுடன் விவசாயிகளுக்கு மண் வள அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியது. இதன்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு முதல் கட்டமாக, மண் வள அட்டை தொடா்பாக விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் பகுதியிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 7 முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பங்கேற்ற மாணவா்களில் 25 போ், வயல்வெளிகளில் ஆய்வு மேற்கொள்வதற்கு தோ்வு செய்யப்பட்டனா். இந்த மாணவா்களுக்கு மண் மாதிரி சேகரிப்பதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கலை அடுத்த கீழ்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட செட்டியப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) இரா.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைமையாசிரியா் முருகேஷ்வரன் முன்னிலை வகித்தாா். தோ்வு செய்யப்பட்ட 25 மாணவா்களும், தலா 5 போ் கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

5 குழுக்கள் சாா்பில் தலா 5 மாதிரிகள் வீதம், மொத்தம் 25 மாதிரிகள் சேகரித்து, திண்டுக்கல்லில் உள்ள வேளாண்மைத் துறை மண் பரிசோதனைக் கூடத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் வட்டார துணை வேளாண்மை அலுவலா் பெருமாள், உதவி வேளாண்மை அலுவலா் கிறிஸ்டி, கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா் மல்லீஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com