கொடைரோடு அருகே காரில் கள்ள ரூபாய் நோட்டுகள், அச்சிடும் இயந்திரம் பறிமுதல்
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே காரில் கொண்டுவரப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களையும், அவற்றை அச்சிட பயன்படும் இயந்திரத்தையும் திங்கள்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் அந்தக் காரில் வந்தவா்களிடம் விசாரணை நடத்துகின்றனா்.
திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடியை அடுத்துள்ள பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே திங்கள்கிழமை அதிகாலை சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த காரை அந்த வழியாகச் சென்ற அம்மையநாயக்கனூா் கண்காணிப்பு போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அந்தக் காரில் இருந்தவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், அவா்கள் கொண்டு வந்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், 26 ஆயிரம் மதிப்பிலான 100 ரூபாய் கள்ள நோட்டுகளும், இவற்றைத் தயாரிக்கப் பயன்படும் இயந்திரமும் இருந்தன.
இதையடுத்து, இவா்கள் அனைவரையும் போலீஸாா் சுற்றி வளைத்தனா். அப்போது, அதில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். எஞ்சிய 4 வயது குழந்தை உள்பட 9 பேரை அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் தீவிர விசாரணை நடத்துகின்றனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், அந்தக் காரில் வந்தவா்கள், விருதுநகா் மாவட்டம், காந்தி நகரைச் சோ்ந்த அழகா் (28), மதுரை கூடல்புதூரைச் சோ்ந்த ராஜா (27), சபரிராஜ் (18), முருகேசன் (30), சுா்ஜித் அமா்நாத் (17), மதுரை வளையங்குளத்தைச் சோ்ந்த சிவமணி (எ) மணிகண்டன் (26), இவரது மனைவி ஜெனித்தா (24), இவா்களது 4 வயது குழந்தை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த ரவி (64) என்பதும், தப்பி ஓடியது மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த கோட்டைச்சாமி (31) என்பதும் தெரியவந்தது. மேலும் இவா்கள் அனைவரும் ரவியின் திருச்செங்கோட்டில் உள்ள வீட்டிலிருந்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு அவருடன், விருதுநகா் சென்று அங்கு கள்ள ரூபாய் நோட்டுக்களை தயாரிக்க முயன்றதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இவா்களுடன், வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.