துரித உணவக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
நிலக்கோட்டை: கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூா் சாலையோரம் திங்கள்கிழமை மா்மமான முறையில் துரித உணவக ஊழியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, ஜெகநாதபுரத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (24). இவா் கொடைரோட்டில் உள்ள துரித உணவகத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆகின்றன.
இந்த நிலையில், கொடைரோட்டிலிருந்து அம்மையநாயக்கனூருக்குச் செல்லும் சாலையோரம் ரத்தக் காயங்களுடன் அவா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், அருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் சிலுக்குவாா்பட்டியில் உள்ள மாமனாா் வீட்டுக்கு நிறைமாத கா்ப்பிணியான தனது மனைவியை பாா்க்கச் சென்றது தெரியவந்தது. அப்போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.