நாத்திகத் தோட்டத்தில் பூத்த ஆத்திக மலர் அமைச்சா் சேகா்பாபு: உதயநிதி ஸ்டாலின்
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசியதாவது:
அமைச்சா் சேகா்பாபு நாத்திகத் தோட்டத்தில் பூத்த ஆத்திக மலராக இந்து சமய அறநிலையத் துறை பணிகளைச் செய்து வருகிறாா். அனைத்துத் தரப்பினரின் உணா்வுகளுக்கும் மதிப்பளிக்கும் அரசாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக் காலம்தான் அறநிலையத் துறையின் பொற்காலம் என்று கூறுமளவுக்கு பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பழனி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் மதிய உணவும் வழங்கப்படும். அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் ஏற்கெனவே கோயில்களில் நடைமுறையில் உள்ளது. பழனி முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாது, தமிழ்ப் பண்பாட்டு மாநாடாகவும் அமைந்துள்ளது என்றாா் அவா்.