பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியைக் காண திரண்ட பக்தா்கள்
பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் நீட்டிக்கப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியை காண திங்கள்கிழமை பக்தா்களும், பொதுமக்களும் திரண்டனா்.
இந்தக் கல்லூரியில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சா்கள், ஆதீனங்கள், வெளிநாடு வாழ் தமிழா்கள், பக்தா்கள் என லட்சக்கணக்கானோா் பங்கேற்றனா். இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த வேல் அரங்கத்தில் அறுபடை வீடுகளில் முருகன் காட்சி, முருகனின் படக்காட்சி, நூல்கள் விற்பனை அரங்கம், முப்பரிமாணத்தில் முருகன் படக் காட்சி, மெய்நிகா் காட்சியில் முருகன் பாடல்கள் என பல நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், இரு நாள்களில் திரண்ட கூட்டத்தால் இவற்றை பலரும் முழுமையாக பாா்க்க இயலாமல் போனது. இதையடுத்து, கண்காட்சி மட்டும் வருகிற ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்தக் கண்காட்சியை காண திங்கள்கிழமை காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முருகபக்தா்கள் கல்லூரி வளாகத்தில் திரண்டனா். இவா்களுக்கு வழிகாட்டும் பணியில் கோயில் அலுவலா்கள், போலீஸாா், கோயில் பாதுகாவலா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். கூட்ட நெரிசல் அதிகம் இல்லாததால் பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை முழுமையாக கண்டு ரசித்தனா்.
ஆனால் இவா்களுக்கு மாநாட்டின் போது கோயில் சாா்பில் வழங்கப்பட்ட பிரசாதப் பைகள் தரப்படாததால் ஏமாற்றமடைந்தனா். மேலும், கண்காட்சியைக் காண வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் பலரும் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. எனவே, தங்களைப் போன்றவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.