ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளி ஒருவருக்கு புதிய குடும்ப அட்டையை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளி ஒருவருக்கு புதிய குடும்ப அட்டையை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

தமிழகத்தில் இதுவரை 15.94 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
Published on

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் விழா ஒட்டன்சத்திரம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு, மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு 502 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசினாா்.

இதன்பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் இதுவரை 15,94,321 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, புதிதாக 2,89,591 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில் முதல் கட்டமாக 93,396 போ் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, புதிய அட்டைகள்அச்சிட்டு மாவட்ட நிா்வாகம் மூலம் அவா்களுக்கு வழங்க உள்ளோம்.

மேலும் பொதுமக்களின் நலன் கருதி 739 முழு நேரக் கடைகள், 1,376 பகுதி நேரக் கடைகள் என மொத்தம் 2,115 நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சிறுதானியங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் 2 கிலோ அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு (ராகி) வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில சிறுதானியங்களை ரேசன் கடைகளில் விநியோகிக்கவும், 100 இடங்களில் அமுதம் அங்காடிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு உணவுத் துறைக்கு தமிழக முதல்வா் ரூ. 10,500 கோடி மானியமாக வழங்கினாா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், பழனி கோட்டாட்சியா் செள. சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி, வேளான் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி. ராஜாமணி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத் தலைவி மு. அய்யம்மாள், நகா்மன்ற துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் ஜோதீஸ்வரன், தா்மராஜன், தங்கராஜ், வட்ட வழங்கல் அலுவலா் ஜெகதீஸ்வரன், துணை வட்டாட்சியா்கள் கனகராஜ், சஞ்சீவி, பிரசன்னா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் வீ. கண்ணன், பொதுக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com