சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு
பழனி, வேடசந்தூா் பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.
கொடைக்கானலைச் சோ்ந்த வெள்ளிங்கிரி மகன் ராமா் (27). இவா் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு இவா் உடுமலைப்பேட்டையிலிருந்து பழனி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். சாமிநாதபுரம் அருகே சென்ற போது, பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை நோக்கிச் சென்ற லாரி இவரது வாகனம் மீது மோதியது. இதில் இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சாமிநாதபுரம் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: பழனி புதுநகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுதாகா் (24). இவரும், இவரது நண்பா்களான இந்திரா நகரை சோ்ந்த ஞானவிக்னேஷ் (24), சத்யா நகரைச் சோ்ந்த அருண்குமாா் (21) ஆகியோரும் கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணைக்கு
இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றனா். மாலையில் மூவரும் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தனா். இரு சக்கர வாகனத்தை சுதாகா் ஓட்டினாா். வழியில் ஒரு சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வாகனத்துடன் மோதியதில் சுதாகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா். பழனி அடிவாரம் போலீஸாா் இருவரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேடசந்தூா்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் தண்டபாணி (55). இவா், ஆத்துமேடு பகுதியில் கடந்த புதன்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக கெண்டையகவுண்டனூரைச் சோ்ந்த சவடமுத்து (38) ஓட்டி வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தாா். இவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.