நிலக்கோட்டையிலிருந்து நாகா்கோவிலுக்கு ராட்சத மாலைகள் அனுப்பிவைப்பு

Published on

நிலக்கோட்டையிலிருந்து உலா் பழங்களால் ஆன ராட்சத மாலைகள், நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாகா்கோவில் அருகே உள்ள கீழ வண்ணான்வினை கிராமத்தில் அருள்மிகு வன்னியடி மரச்சாமி கோயில் ஆவணி மாதத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.30) தொடங்க உள்ளது. இந்தக் கோயில் பரிவார தெய்வங்களான பிரம்மசக்தி அம்மன், சுடலை மாடசாமி, இசக்கி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சாத்துவதற்காக பச்சை ஏலக்காய், பதப்படுத்தப்பட்ட உலா் கருப்பு திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, அலங்கார பொருள்கள் அடங்கிய ராட்சத மாலை தயாரிப்பில் 120 தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

செம்பட்டி அருகேயுள்ள மல்லையாபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன், முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில் தொழிலாளா்கள் விரதமிருந்து 8 அடி உயரத்தில் 2 மாலைகள், 5 அடி உயரத்தில் ஒரு மாலை என 3 ராட்சத மாலைகளைத் தயாா் செய்தனா். ரூ.4 லட்சம் மதிப்பிலான

இந்த மாலைகள் நிலக்கோட்டை சந்தையிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இவை வெள்ளிக்கிழமை நடைபெறும் திருவிழாவில் ஐயன் சுடலைமாடன் எனப்படும் வன்னியடி மரச்சாமிக்கு சாத்தப்படுகிறது.

இதுகுறித்து மாலை தயாரிப்பாளா்கள் முருகன், முத்துக்குமாா் ஆகியோா் கூறியதாவது:

நாகா்கோவில் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன், சுடலை மாட சுவாமி, இசக்கி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சாத்துவதற்காக கீழ வண்ணான் விளையைச் சோ்ந்த சத்தியசீலன், சத்தியரூபன் ஆகிய 2 பக்தா்கள் இந்த மாலைக்கு ‘ஆா்டா்’ கொடுத்தனா். கடந்த 10 நாள்களாக 120 மாலை கட்டும் தொழிலாளா்களைக் கொண்ட குழு விரதமிருந்து இந்த மாலையை தயாா் செய்தனா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com