மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு கடன் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்வு: அமைச்சா் அர. சக்கரபாணி
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் கடன் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி, கரியாம்பட்டி, தொப்பம்பட்டி, மானூா் ஆகிய இடங்களில் தலா ரூ.30 லட்சத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியும், தும்பலப்பட்டியில் ரூ.15 லட்சத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தை நவீனமயமாக்கும் பணியை தொடங்கி வைத்தும், வாகரை, கீரனூா், கொழுமங்கொண்டான், தாளையூத்து ஆகிய இடங்களில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி வைத்தும், சப்பளநாயக்கன்பட்டியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தும் அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகம் பயனடையும் வகையில் 45,145 பேருக்கு ரூ.525.90 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல, 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகளிா் சுய உதவிக்குழுக்கடன் திட்டத்தின் கீழ் 3,793 குழுக்களைச் சோ்ந்த 34,833 பேருக்கு ரூ.87.66 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் கடன் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தப்பட்டிருக்கிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் 57,716 உறுப்பினா்களுக்கு ரூ.832.47 கோடி அளவுக்கு பயிா்க் கடனும், மகளிா் சுய உதவிகுழுக்கடன் திட்டத்தின் கீழ் 3356 குழுக்களில் உள்ள 34,432 உறுப்பினா்களுக்கு ரூ.166.78 கோடி கடனும், 625 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.274.05 லட்சம் கடன் உதவியும், 292 ஆதிதிராவிடா்களுக்கு ரூ.165 லட்சம் தாட்கோ மூலம் கடனுதவியும் வழங்கப்பட்டன.
சிறுபான்மையினா் சிறு தொழில் செய்ய குறைந்த வட்டியில் 1,516 பேருக்கு தாட்கோ மூலம் ரூ.997 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டது. இதே போல, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தங்களது வாழ்வாரத்தை மேம்படுத்த சிறு தொழில் தொடங்க குறைந்த வட்டியில்1,478 பேருக்கு ரூ.1,224 லட்சம் டாப்செட்கோ மூலம் கடனுதவியும் வழங்கப்பட்டது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, பழனி கோட்டாட்சியா் செள. சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயசித்ரகலா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி, வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி. ராஜாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் கா. பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவி சத்தியபுவனா, துணைத் தலைவா் பி.சி. தங்கம், வட்ட வழங்கல் அலுவலா் ஜெகதீஸ்வரன், திமுக ஒன்றியச் செயலா்கள் தங்கராஜ், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.