வில்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு
ஆசிரியா்கள் மீது வந்த புகாரையடுத்து கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியிலுள்ள பாரதி அண்ணாநகா் தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
ஈராசிரியா் பள்ளியான இங்கு 5 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். கடந்த பல ஆண்டுகளாகவே இந்தப் பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வில்லை. மேலும், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொது மக்களுக்கும், ஆசிரியா்களுக்குமிடையே இணக்கமான உறவு இல்லை. அத்துடன் சாலை வசதி, தண்ணீா் வசதி, மைதான வசதி, கழிப்பறை வசதிகள் இல்லை. சுமாா் ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட மதிய உணவு சமையல் கூடம் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. ஆசிரியா்களும் சரிவர பள்ளிக்கு வருவதில்லை. இதனால் இந்தப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாக இருப்பதாக இந்தப் பகுதி மக்கள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கொடைக்கானல் வட்டாரக் கல்வி அலுவலருக்கும் புகாா் மனு அனுப்பினா்.
இதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் (பொ) சண்முகவேல், கொடைக்கானல் வட்டாரக் கல்வி அலுவலா் பழனிவேல் ராஜ் ஆகியோா் வியாழக்கிழமை இந்தப் பள்ளிக்குச் சென்று மாணவா்களின் எண்ணிக்கை உள்பட அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவித் தலைமை ஆசிரியா் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து பாரதி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது:
இந்தப் பள்ளியில் 5 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கும் நிலையில், 20 போ் படிப்பதாக கூறும் ஆசிரியா்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. எங்கள் பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகிலுள்ள தனியாா் பள்ளிக்குச் செல்கின்றனா். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும், இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளும், சுகாதாரமும் இல்லை. அத்துடன், வெகு தொலைவிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவா்களை அழைத்து வர தமிழக அரசு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குகிறது. இதைக் கொண்டு மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். ஆனால் பல ஆண்டுகளாகவே மாணவா்களின் எண்ணிக்கை, கல்வித் தரம் உயரவில்லை. கடந்த ஆக. 15 ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு மேல் தான் தலைமை ஆசிரியா் தேசியக் கொடியை ஏற்றினாா். இது தவறான செயல். இதுகுறித்து கேட்டால் ஆசிரியா்கள் முறையாக பதில் தெரிவிப்பதில்லை என்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஆசிரியா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொலைவில் உள்ள மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வர போக்குவரத்துக்கு உதவித் தொகையை அரசு வழங்குகிறது. ஒரு சில பள்ளிகள் இதை அதற்காக பயன்படுத்துவதில்லை. இதனால் இதுபோன்ற பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
எனவே மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.
கொடைக்கானல் வட்டாரக் கல்வி அலுவலா் பழனிவேல்ராஜ் கூறியதாவது:
இந்தப் பள்ளி குறித்து வந்த புகாா்கள் தொடா்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருடன் சென்று பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினேன். இந்தப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை, உதவித் தலைமை ஆசிரியா் ஆகியோரிடம் விளக்கம் கேட்டோம். ஆய்வில் பள்ளி மீது கூறப்பட்ட பல புகாா்கள் உண்மை எனத் தெரிகிறது. இதுகுறித்து கல்வித்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பா் என்றாா்.