பள்ளப்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

பள்ளப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
Published on

நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீா் தாரைதப்பட்டை வாண வேடிக்கைகளுடன் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு யாக சாலையில் வைக்கப்பட்டது. பிறகு சுதா்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, பூா்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து முதல் கால யாக சாலை பூஜை, வேதபாராயணம், மூன்று கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை சீனிவாச நரசிம்ம சுவாமிகள், சுரேஷ்பவுன் தலைமையிலான சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பட்டு, ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

இந்த விழாவில், திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூா், நெல்லை, தேனி, சென்னை, பெங்களூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com